Pages

சூரிய கிரகணம்...




கிரகணம் என்பது ஓர் அருமையான வானியல் நிகழ்வு. வானில் சுற்றி வரும் பொருள் ஒன்று தற்காலிகமாக வேறொரு வான் பொருளால் மறைக்கப்படும்போது அது கிரகணம் (Grahan) என்று அழைக்கப்படுகிறது. கிரகணம் என்பது ஒரு கிரேக்க சொல். இதற்கு அனாதையாய் தனித்து விடப்பட்ட/மறைக்கப்பட்ட என்பதே பொருளாகும். பொதுவாக கிரகணம் என்பதை சூரிய, சந்திர கிரகணங்களையே குறிக்கும் சொல்லாக நாம் கருதுகிறோம். இந்த சூரிய, சந்திர கிரகணங்கள் சூரியன், சந்திரன் மற்றும் பூமிக்கு இடையே நடைபெறும் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. நம் சூரிய குடும்ப பங்காளியான வியாழன், சனி கோள்களிலும் அவைகளின் சந்திரன்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் கடக்கும் போதும், இரட்டை விண்மீன்களுக்கிடையேயும் கூட இந்த கிரகண விளையாட்டு தொடர்து நடந்து கொண்டே இருக்கிறது.

solal_eclipse_351இந்த சூரிய குடும்பத்தில் பூமியாகிய நாம் மட்டும் சுற்றவில்லை. நம் குடும்ப நாயகனான சூரியனும்கூட சுற்றுகிறது அதன் தாய்வீடான பால்வழி மண்டலத்தை. வானில் சூரியன், தட்டாமாலை சுற்றுவது போல, தன்னைத்தானே தக தகவென இருந்து சுற்றிக்கொண்டு, தான் வசிக்கும் பால்வழி மண்டலத்தையும் நொடிக்கு சுமார் 220 -250 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. இது தன்னிடம் உள்ள ஹைடிரஜனை தொடர்ந்து எரித்தே நமக்கு இப்படி ஒளி வீசும் வாயுப் பந்துதான் சூரியன். இதுவும் கூட ஒரு விண்மீனே..! சூரியன் தனது ஈர்ப்பு சக்தியால், தான் சுற்றுவது மட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினரான 8 கோள்கள், அவற்றின் துணைக்கோள்கள், விண்கற்கள் மற்றும் தனது குடும்ப கடைசி உறுப்பினரான வால் மீன்களையும் இழுத்துக்கொண்டே சுற்றி வருகிறது.  சூரியனின் விட்டம் 1384௦௦௦000 கி.மீ. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு, 149565139438 கி.மீ. ஆனால் இந்த பிரம்மாண்டமான சூரியனை, 3474.8 கி.மீ விட்டமுள்ள குட்டியூண்டு நிலா, தன் நிழலால், சூரியனை நம் பார்வையிலிருந்து மறைக்கும் விளையாட்டுதான் ஜூன் 1, 2011ல் நிகழ்ந்தது.

நமக்கு இந்த தூரம், தொலைவு பற்றி ஒரு வினாக் குறி/ சந்தேகம் மனதுள் எழும். அது சரி.. இந்த சந்திரனோ ரொம்ப பொடிசு..! இது எப்படி இவ்...வ்ளோ. பெரிய அசுர சூரியனை மறைக்கிறது என்பதுதான்.! சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தைப் போல 400 மடங்கு அதிகம். அதே போல, சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலுள்ள தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள தூரத்தைப் போல 400 மடங்கு அதிகம். இது ஓர் அரிதான ஒற்றுமை/ஒப்புமை எனலாம். எனவேதான், நாம் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும், சந்திரனும் ஒரே அளவில் காணப்படுகிறது.
சூரியன், சந்திரன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் சூரிய கிரகண நிகழ்வு உண்டாகிறது. இதில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருக்கும். சூரிய கிரகணம் அமாவாசை நாளில்தான் உருவாகும். சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில், முழு நிலா நாளில் வரும்போது சந்திர கிரகணம் உண்டாகும். இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும். பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. எல்லா அம்மாவாசை நாளிலும் சூரிய கிரகணமும், எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணமும் உண்டாவதில்லை. காரணம், சந்திரன் தன் அச்சில் 5 டிகிரி சாய்வாக பூமியைச் சுற்றுவதே..! இதனால் எல்லா சமயங்களிலும் சூரிய, சந்திர, பூமி நாயகர்கள் ஒரே நேர்கோட்டில் வருவதில்லை.
பொதுவாக ஓர் ஆண்டில், 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த 2011 ம் ஆண்டில் 4 பகுதி சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் தெரியும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம், ஜனவரி 4 ம் நாள் நிகழ்ந்தது. அடுத்த சூரியகிரகணம், ஜுன் முதல் நாள்தான்.
இந்த ஆண்டில் வரும் கிரகண அட்டவணை இதோ.!
  • 2011 , ஜனவரி 4 , பகுதி சூரிய கிரகணம்.
    2011, ஜனவரி 4 ம் நால், சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , ஜுன் 15 , முழு சந்திர கிரகணம்
  • 2011 , ஜுலை 1 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011 , நவம்பர் 25 , பகுதி சூரிய கிரகணம்
  • 2011, டிசம்பர் 10 , முழு சந்திர கிரகணம்
சீனாவில் கிரகணம் பார்த்தல் 
china_telescope_401கிரகணம் பற்றிய ஆராய்ச்சிகள் கி.பி. 19, 20ம் நூற்றாண்டுகளில்தான் நடைபெற்றன. ஆனால் நாம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலங்களில் இருந்து கிரகணங்களைப் பார்த்ததிற்கான பதிவுகள் காணப்படுகின்றன. சீன ஜோதிடர்களும், வானவியலாலர்களும், பாபிலோனியர்களும் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே முழு சூரிய கிரகணம் பற்றி எழுதி வைத்துள்ளனர். வரலாற்றுப் பதிவுகளின் காலத்தைச் சரியாகப் பட்டியலிட இந்த கிரகணம் வந்து போன தேதிகள் உதவுகின்றன. சிரியன்கள் (Syrian ) காலத்து களிமண் பலகை ஒன்றில், கி.மு. 1223, மார்ச் 5ம் நாள் சூரிய கிரகணம் வந்து போன நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு 1036ல் ஜுலை 31ம் நாள் பகல் இரவாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளனர். 
அயர்லாந்தில் காணப்படும் கல்லில், கி.மு,3,340 , நவம்பர் 30 ம் நாள் ஒரு கிரகணம் ஏற்பட்டதாக பதிவு உள்ளது. சீனர்களின் வரலாற்றுப் பதிவுகள் சுமார் 4,000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்பே சூரிய கிரகணங்கள் வந்து போனதையும், அவைகளின் மூலம் பூமியின் சுற்று வேகத்தின் மாற்றங்கள் அறியப்பட்டதாகவும் பதிவுகள் சொல்லுகின்றன. பாபிலோனியர்கள் கணிதவியல் மூலம் கிரகணம் வருவதைக் கணித்தனராம். எகிப்திய பிரமிடுகளிலும், கோயில் கற்சித்திரங்களிலும் கிரகணம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
கி.மு. 6 ம் நூற்றாண்டில் மெடோனிக் மற்றும் சாரோஸ் எனற வானவியல் விஞ்ஞானிகள் மீண்டும், மீண்டும் வரும் கிரகணங்களைக் கவனித்தனர். அவை ஓர்ஒழுங்கு முறையில் வருவதைப் பார்த்தனர். அவற்றை வகைப் படுத்தினர். அவர்களின் பெயராலேயே கிரகணங்கள் வந்து போவதை சாரோஸ் சுழற்சி/காலம் மற்றும் மெடோனிக் காலம் என்று அழைக்கப் படுகிறது. இன்று நாம் சாரோஸ் சுழற்சியையே பின்பற்றுகிறோம்.  பூமி மற்றும் சந்திரனின் பாதைகள் சந்திக்கும் புள்ளியிலிருந்து, சூரியன் நிலவினுடைய 18 .5 டிகிரி பாகைக்குள் இருக்கும்போது மட்டுமே சூரிய கிரகணம் நிகழ வாய்ப்பு உள்ளது. 18வருடங்கள், 11 நாட்கள், 8மணி நேரம் என்பது ஒரு சாரோஸ் சுழற்சி/காலம் ஆகும்.
ireland_eclipse_347இந்த சூரிய கிரகணம் சாரோஸ் சுழற்சி 118 எண்ணைப் பெற்றுள்ளது. இந்த சாரோஸ் சுழற்சியில் மொத்தம் 72 கிரகணங்கள் உள்ளன. பகுதி கிரகணங்கள்:8; முழு கிரகணங்கள்:40; இடைப்பட்டது/ஹைபிரிட்:2; வளைய/கணக்கான கிரகணம்:15 ; அதன் பகுதி கிரகணம்:7 என மொத்தம் 72 கிரகணங்கள்.இதற்கான மொத்த காலகட்டம், 1280 ஆண்டுகள் ஆகும். இந்த சுழற்சியின் முதல் பகுதி சூரிய கிரகணம், தென் துருவத்தில் அண்டார்டிக்காவின் மேல் அற்புதமாய் குடிகொண்டது. அந்த நிகழ்வு நாள், 0803 ம் ஆண்டு, மே மாதம் 24 ம் நாளாகும்.ஒவ்வொரு 18 ஆண்டுகளிலும் இந்த சாரோஸ் சுழற்சி மீண்டும் மீண்டும் வரும். இந்த முறை எனபது, சந்திரனின் நோடு/சாய்மானம் வருவதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த நூறாண்டு காலத்தில், இந்த சாரோஸ் சுழற்சி 118, தென் துருவத்திலிருந்து இப்போதுதான் வட துருவத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. இந்த சாரோஸ் சுழற்சி முடிய இன்னும் 5 கிரகணங்கள் பாக்கி உள்ளன. எப்போது முடியும் தெரியுமா..? அதனைப் பார்க்க 2083 , ஜூலை 15 வரை காத்திருக்க வேண்டும்..! அதுவும் வட தருவ ஆர்டிக் பகுதியில் தான் முடியும்..! நமது சந்ததிகள் பார்த்து/கேட்டு மகிழ்வார்கள்.
நம் பூமி தவிர வேறு கோள்களில் இப்படி கிரகணத்தைப் பார்க்க முடியுமா? கட்டாயம் பார்க்கலாம். நமது பூமி போலவே, சூரிய குடும்ப உறுப்பினரான, செவ்வாய், வியாழன், சனி மற்றும் புளூட்டோவிலும் சூரிய கிரகணங்கள் நிகழும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். செவ்வாய் கோளில், அதன் துணைக் கோள்களான, போபோஸ் மற்றும் டெய்மோஸ் மூலம் சூரிய கிரகணம் உண்டாகிறது. இங்கே போபோஸ் வழித்தடத்தில் உருவாகும் கிரகணம் மிகக் குறைந்த நேரம், அதாவது 20 நொடிகள் மட்டுமே..! நமது குடும்பத்தின் பெரிய அண்ணாச்சியான வியாழனுக்கு 69 மேற்பட்ட துணைக் கோள்களும், ஏராளமான குட்டிக் குட்டி துணைக்கோள்களும், உள்ளன. இவற்றில் அமால்தியா, அயோ, யுறேபா, கனிமேடு மற்றும் காலிஸ்டோ என்ற 5 துணைக் கோள்கள் மூலம் மட்டுமே சூரிய கிரகணம் உருவாகிறது..! ஆனால் புதன் மற்றும் வெள்ளி கோள்களில் சூரிய கிரகணம் ஏற்படாது. ஏனெனில் இவைகளுக்கு துணைக் கோள்கள் இல்லை.
30 .. நாட்களில்.... 3 கிரகண..கொண்டாட்டங்கள்..!
இந்த மாத..ஜூன் 30 நாட்களுக்குள் மூன்று கிரகண கொண்டாட்டங்கள் நமக்கு கிடைக்க இருக்கின்றன. சூரிய கிரகணம் ஏற்பட்ட 15 வது நாளின் முன்போ/பின்போ கட்டாயமாய் சந்திர கிரகணம் உண்டாகும். ஜூன் முதல் நாள் பகுதி சூரிய கிரகணம். இன்னும் 15 நாட்களுக்குள், முழு சந்திர கிரகணம் ஜூன் 15 ம் நாள். அதனைத் தொடர்ந்தே அடுத்த 15 நாட்களுக்குள், ஜூலை 1 ம் நாள், மீண்டும் பகுதி சூரிய கிரகணம் என்றால், வானின் இப்படி ஒரு சாகச விளையாட்டைக் காண நமக்கெல்லாம் சந்தோஷக் கொண்டாட்டம்தானே..!



                                                                                                                                                            http://www.keetru.com
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "சூரிய கிரகணம்..."

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets