புதுவை மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனிபகவான் கோயிலில் நாளை மறுதினம் காலை 7.51 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் மும்முரமாக செய்துவருகிறது. இதுகுறித்து, கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறியதாவது:
சனிப்பெயர்ச்சியன்று கோயில் மற்றும் நளன் குளத்திற்கு பக்தர்கள் சிரமம் இன்றி செல்லவும், சனிபகவானை தரிசனம் செய்யவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக தர்ம தரிசனம், ரூ.100, ரூ.300 மற்றும் வி.ஐ.பி தரிசனம் என 4 வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில், சுமார் 2 லட்சம் பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்கும் விடுதிகள், உணவு, வாகன பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம். அன்று ஜனகல்யாண் அமைப்பு சார்பில் இலவச அன்னதானத்திற்கும் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.