நட்சத்திரமொன்றிலிருந்து உயிரினங்கள் வாழக்கூடிய வலயத்திலுள்ள, பூமி போன்ற கிரகமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா இன்று தெரிவித்துள்ளது.
கெப்ளர் விண்வெளித் தொலைக்காட்டி மூலம் கண்டுபிடிக்கப்பிடிக்கப்பட்ட இந்த கிரகத்திற்கு கெப்ளர் 22-பி (Kepler 22-b) என பெயரிடப்பட்டுள்ளது.
எமது சூரியனைப் போல் அல்லாத நட்சத்திரமொன்றை கெப்ளர் 22-பி கிரகம் சுற்றி வருகிறது. ஒரு தடவை அதன் சொந்தச் சூரியனை சுற்றுவதற்கு 290 நாட்கள் செல்கிறது.
நட்சத்திரங்களின் அளவு, வெப்பநிலை முதலான விடயங்களை கருத்திற்கொண்டு அந்த நட்சத்திரத்திலிருந்து எவ்வளவு தூர எல்லையில் உயிரினங்கள் இருக்கக்கூடிய கிரகங்கள் காணப்படலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய பிரதேசமானது உயிரினங்கள் ‘வசிக்கத்தக்க வலயம்’ (habitable zone) என அழைக்கப்படுகிறது.
இதன்படி எமது சூரிய தொகுதிக்கு அப்பால் ‘வசிக்கத்தக்க வலயத்திற்குள்’ கண்டுபிடிக்கப்பட்ட முதல் கிரகம் கெப்ளர் 22- பி ஆகும். 600 ஒளி ஆண்டுகள் தூரத்திலுள்ள இந்த கிரகம் பூமியைவிட 2.4 மடங்கு பெரிதானதாகும். ஆதன் வெப்பநிலை சுமார் 22 பாகை செல்சியஸ் ஆகும்.
இவ்வருட ஆரம்பத்தில் பிரெஞ்சு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் உயிர் வாழத் தேவையான அம்சங்களைக் கொண்டிருக்கக்கூடிய கிரகமொன்றை கண்டறிந்ததாக அறிவித்தனர். எனினும் நாசாவினால் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட இத்தகைய முதல் கிரகம் கெப்ளர் 22- பி என்பது குறிப்பிடத்தக்கது.
பூமிக்கு கிடைப்பதைவிட 25 சதவீதம் சூரியஒளி குறைவாகவே அதற்கு கிடைப்பதால் மென்மையான வெப்பநிலை நிலவுகிறது. இது திரவ நிலையில் தண்ணீர் காணப்படுவதற்கான வாய்ப்பை வழங்கும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
2005 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு ஏவப்பட்ட கெப்ளர் தொலைக்காட்டி சுமார் 155,000 நட்சத்திரங்களை அவதானித்து வருகிறது. இதுவரை இத்தொலைக்காட்டி மூலம் கிரகங்கள் என்ற அங்கீகாரம் பெறத்தக்கவை எனக் கருதப்படும் 2326 விண்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 207 கிரகங்கள் பூமி அளவிலானவையாகும்.
Responses
0 Respones to "பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு: நாசா தெரிவிப்பு."
Post a Comment