மேலே எறிந்த பந்து மீண்டும் மேலே செல்லாமல் ஏன் பூமிக்கே திரும்பி வருகிறது?
மரத்திலிருக்கும் பழம் ஏன் பூமியை நோக்கிக் கீழே விழுகிறது? அந்தப் பழம் மரத்திலிருந்து அதற்கும் மேலே ஏன் செல்லவில்லை?
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் இறுதியில் பூமியை நோக்கி வருகின்றனவே ஏன்? இது போன்ற நிகழ்ச்சிகள் எதனால் நடக்கின்றன? என்று கூட எவரும் நினைத்தும் பார்த்ததில்லை.
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தமது அறிவுக் கூர்மையால் முயன்று விடை கண்டவர் சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை. இவர் கண்டுபிடித்து கூறிய பின் உலகம் வியந்தது. ‘ஒப்பற்ற அறிவுலக மேதை சர் ஐசக் நியூட்டன்’ என்று அவரைப் பாராட்டியது.
இங்கிலாந்தில் ‘உல்ஸ் த்ரோப்’ என்று ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில்தான் சர் ஐசக் நியூட்டன் பிறந்தார். இந்த ஊர் அவர் பிறந்ததனாலேயே வரலாற்றில் இடம் பெற்றது.
அறிவாளிகள் சோதனைகளோடுதான் பிறப்பார்கள்; அல்லது பிறந்தபின் வாழ்க்கை அவர்களுக்கு சோதனையாக அமையும். சோதனைகளையும், அதன் வழியாகக் கிடைக்கும் வேதனைகளையும் எதிர்த்துப போராடிக் கொண்டோ, அல்லது அவைகளை எல்லாம் துச்சமென மதித்தோ அவர்கள் வாழ்க்கையைக் கடத்திக்கொண்டே தான் வெற்றி என்னும் சிகரங்களை எட்டிப் பிடித்திருத்திருக்கிறார்கள் என்பதை பல மேதைகளின் வரலாறுகள் நமக்கு உணர்த்துகின்றன. இது சர் ஐசக் நியூட்டனுக்கும் பொருந்தும்.
உலகம் பேரானந்தத்தோடு கொண்டாடும் கிறிஸ்துமஸ் அன்றுதான் நீயூட்டன் பிறந்தார். அவர் பிறந்த ஆண்டு 1642. மகன் பிறந்ததை நினைத்து அவரது தாய் மகிழ்ச்சி கொள்ளவில்லை.
ஏனெனில், நியூட்டன் பிறப்பதற்கு முன், அதுவும் இரண்டு மாதங்களுக்குப் முன்புதான் நியூட்டனின் தந்தை எதிர்பாராதவிதமாக மரணத்தைத் தழுவினார். இந்தச் சோகம் நியூட்டனின் தாயாரைப் பாதித்திருந்ததால், நியூட்டனின் பிறப்பு அவருக்கு வேதனையைத் தான் கொடுத்தது.
கணவன் இல்லாமல் காலமெல்லாம் வாழ நியூட்டனின் தாயார் விரும்பவில்லை. நியூட்டனுக்கு மூன்று வயது ஆகின்ற போது அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார்.
பிறப்பதற்கு முன்பே, தாய் இன்னொரு மனிதரிடம் அடைக்கலம்.. ஏது செய்வதென்பது கூட புரியாத பருவத்தில் இருந்த நியூட்டனை அவரது பாட்டிதான் பராமரித்தார். தந்தையின் பொறுப்பும், தாயின் பரிவும் இந்தப் பாட்டியிடமிருந்து தான் நியூட்டனுக்கு கிடைத்தது.
தாம் பிறந்த உல்ஸ்திரோப் என்ற கிராமத்தில்தான் ஆரம்பக் கல்வியை நியூட்டன் கற்றார்.
பள்ளிக் கல்வியை முடித்த பின்பு நியூட்டனுக்குக் கல்லூரி சென்று கணிதம் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. ஆனால் வறுமையோடு போராடிக்கொண்டிருக்கும் நியூட்டனின் பாட்டியால், மேற்கொண்டு அவரைப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் இயலவில்லை.
ஏதாவதொரு வேலை தேடுவதே நல்லது என்ற முடிவுக்கு நியூட்டன் வந்தார். அதுவும் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. இறுதியில் நியூட்டனுக்கு ஒருவேலை கிடைத்தது. கிடைத்த வேலையிலும் விருப்பத்தோடு பணியாற்றினார். நியூட்டனுக்குக் கிடைத்த வேலை என்ன தெரியுமா?
ஒரு நிலப்பிரபுவின் ஆடுகளை மேய்ப்பதே அந்தப் பணி. அதிலும் நான்காண்டுகள் ஈடுபட்டார் படிக்க வேண்டிய பையன், ஆடு மேய்ப்பதை அறிந்து, நியூட்டனின் தாய்மாமன் கலங்கினார். அவரது முயற்சியால் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள டிரினிடி கல்லூரியில் நியூட்டன் சேர்க்கப்பட்டார். கணிதத்தில் பட்டம் பெற்றார்.
விடுமுறைக்கு தமது கிராமத்திற்கு வந்த நியூட்டன் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்தில் இருந்தார் அப்போது ஒரு மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஒன்று கீழே விழுவதை நியூட்டன் கண்டார். இந்தக் காடசிதான் அவரை சிந்திக்க செய்தது. மரத்தில் இருந்து ஆப்பிள் பழம் ஏன் கீழே விழுகிறது, என்ற வினா அவர் உள்ளத்தில் உட்கார்ந்து கொண்டது….
எல்லாப் பொருட்களையும் தன் மையத்தை நோக்கி ஈர்க்கும் சக்தி கொண்டது பூமி என்பதை கண்டுபிடித்து பூமிக்கு ‘புவி ஈர்ப்பு சக்தி உண்டு’ என்பதை நியூட்டன் கண்டறிந்தார்.
பூமிக்குள்ள ஈர்ப்பு சக்தி, வானத்திலுள்ள கோள்கள், விண்மீன்கள் ஆகியவற்றிற்கும் உண்டு என்று நியூட்டன் கண்டுபிடித்தார். அந்த ஈர்ப்பு சக்திதான் கோள்களைச் சூரியனைச் சுற்றி வரும்படி செய்கின்றன என்று அறிந்ததும் நியூட்டன்தான்.
தமது இருபத்து ஆறாம் வயதில் தாம் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்த நியூட்டன், இந்தப் பணியில் முப்பத்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
ஒளியைப் பற்றிய ஆய்வில் நியூட்டன் இரவு பகலாக பாடுபட்டார்.
சூரியனின் ஒளியை வெண்மை நிறம் என்றுதான் இன்றும் நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் சூரியனின் ஒளி வெண்மை அல்ல; அது ஏழு நிறங்களின் தொகுப்பு என்று நியூட்டன் கண்டுபிடித்தார்.
இந்த நிறங்களின் சுருக்கம்தான் ஆங்கிலத்தில் ‘விப்ஜியார்’ என்று குறிப்பிடப்படுகிறது..
நியூட்டனின் வட்டத் தகட்டைக் கொண்டு, சூரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களின் தொகுப்பைக் காணலாம்.
‘டெலஸ்கோப்’பை வடிவமைத்ததும் நியூட்டன்தான்.
‘டெலஸ்கோப்’பை வடிவமைத்ததும் நியூட்டன்தான்.
நியூட்டனின் அறிவாற்றலையும், கண்டுபிடிப்புகளையும் கவுரவிக்கும் வகையில், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக நியூட்டன் நியமிக்கப்பட்டார். நாணயச் சாலை பாதுகாப்பாளராகவும் அவர் பணி ஆற்றினார். ஆனால் அரசியலில் நியூட்டனின் அக்கறை செல்லவில்லை.
பூமியின் ஈர்ப்புத் தன்மையைக் கண்டுபிடித்த இந்த மேதையை, குடும்ப வாழ்க்கை ஈர்க்கவில்லை. அதனால் இறுதிவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.
தமது 85 ஆம் வயதில் நியூட்டன் இறந்தார்.
இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் நியூட்டன் கல்லறை இருக்கிறது. இங்குதான் இங்கிலாந்து நாட்டின் இளவரசியான டயானாவும் புதைக்கப்பட்டார்.