ஒரு வழக்குரைஞரின் குடும்பத்தில், 1818 மே 5-ல் பிரஷ்யவின் ரைன் மாநிலத்தில், திரிர் என்ற நகரத்தில் ஹைன்ரிக் மார்க்ஸ் – ஹென்ரிட்டே தம்பதிக்கு மகனாக காரல் மார்க்ஸ் பிறந்தார்.
இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் காரல் மார்க்ஸூக்கு அப்போது இருந்தனர்.
திரிர் உயர்நிலைப்பள்ளியில் 1830 முல் 1835 வரை மார்க்ஸ் பயின்றார்.
பள்ளி இறுதி வகுப்பில் நடந்த ஒரு கட்டுரைப் போட்டியில், ‘என்ன வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்பதைப் பற்றி ஒரு இளைஞனுடைய சிந்தனைகள்’ என்று தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். அப்போது அவருக்கு வயது பதினேழு.
தன்னுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையும், குறிக்கோளும் என்ன? என்பதை மார்க்ஸ் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். பிற்காலத்தில் மார்க்ஸ் எந்த திசை வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்போகிறார் என்பதை இந்தக் கட்டுரை அடித்தளமிட்டது.
பதினேழு வயதுச் சிறுவர்களுக்குரிய சிந்தனையிலிருந்து மார்க்ஸின் சிந்தனை முற்றிலும் மாறியிருந்தது.
உயர்நிலைப்பள்ளி படிப்புக்குப் பிறகு மார்க்ஸ் போன் நகரத்திலும், பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சட்டம் பயின்றார். அவர் சட்டவியலைத் தேர்ந்தெடுத்தாலும், தத்துவ ஞானத்தையும், வரலாற்றையும் மிகவும் விரும்பிப் பயின்றார்.
1814-ஏப்ரலில் இயெனா பல்கலைக் கழகத்தில் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்து, தத்துஞானத்தில் டாக்டர் பட்டம பெற்றார்.
பத்திரிக்கைத் துறையை அறிந்து கொள்ள விரும்பிய மார்க்ஸ், ‘ரைன்’ பத்திகையில் 1842-ஏப்ரலில் வேலைக்குச் சேர்ந்தார். அதே வருடம் அக்டோபர் மாதம் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஆனார்.
ஜெர்மனியின் அரசியல் நிலையையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மார்க்ஸ் அறிந்து கொள்ள பத்திரிக்கைப் பணி உதவியது.
சமூக – பொருளாதாரப் பிரச்சினைகளையும், பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடுகளையும் பிரிட்டன், பிரான்சிலிருந்து வெளிவந்த சோஷலிஸ்டு நூல்கள் மார்க்ஸின் சிந்தனைக்கு உரமூட்டின.
பிரஷ்ய அரசாங்கம் ‘ரைன்’ பத்திரிக்கையைத் தடை செய்ய முயன்றது. அதனால் 1843- மார்ச் 17 – ல் அந்தப் பத்திரிக்கையிலிருந்து காரல் மார்க்ஸ் விலகினார்.
காரல் மார்க்ஸ் ஆரம்ப காலங்களில் கவிதைகள் எழுதுவதிலும் கவனம் செலுத்தினார். அத்தகைய கவிதைகளில் ஒன்று;
“என்னைக் கட்டிய தலைகளை நொறுக்கி எழுந்தேன்
‘எங்கே செல்கிறாய்? என்க்கொரு உலகம் தேடி!
இங்கே அகன்ற பசும்புல் வெளிகளும்
கீழே கடல்களும் மேலே விண்மீன்களும் இல்லையா?
உலகம் என்னிடமிருந்து தோன்ற வேண்டும்
என் இதயத்தில் அது வேரூன்ற வேண்டும்.
என் இரத்தத்தில் அது ஊற்றெடுக்க வேண்டும்
என் ஆன்மாவின் மூச்சில் அது வசிக்க வேண்டும்
நான் நெடுந்தூரம் ஊர்ந்து சென்றேன்
திரும்பினேன் கீழும் மேலும் உலகங்கள்
விண்மீன்களும் கதரவனும் துள்ளின
மின்னல் வெட்டியது நான் மடிந்தேன்”
‘தேடல்’ என்ற தலைப்பில் காரல்மார்க்ஸ் எழுதிய இந்தக் கவிதையை ஜென்னிக்குக் காணிக்கையாக்கினார்.
தன்னுடன் பயின்றவரும், தன்னைவிட மூன்று வயது மூத்தவரும், தன்னைவிட வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த வருமான ஜென்னியை மார்க்ஸ் மணந்து கொண்டார். மாணவப் பருவத்திலேயே ஒருவரை ஒருவர் விரும்பி, எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்திருந்தனர்.
காரல் மார்க்ஸ் தம்பதிக்கு ஜென்னி, எலியனோரா, லௌரா, பிரான்சிஆகா என்ற நான்கு பெண் குழந்தைகள் பிறந்தன.
அறிஞர்களுக்கெல்லாம் அறிஞராகத் திகழ்ந்த காரல் மார்க்ஸ், தமது ஓய்வு நேரத்தை தமது குழந்தைகளுடன் விளையாடுவதிலும், கொஞ்சி மகிழ்வதிலும் செலவிட்டார். அவர்களோடு விளையாடும்போது காரல் மார்க்ஸூம் குழந்தையாக மாறிவிடுவார்.
ஒருவர் வினாத் தொடுக்க, மற்றவர் அதற்குப் பதில் சொல்லும் ‘வினா – விடை’ என்ற விளையாட்டு காரல் மார்க்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த விளையாட்டை குழந்தைகள் ஆடிக் கொண்டிருந்த போது மார்க்ஸூம் அதில் கலந்து கொண்டார். அப்போது குழந்தைகள் காரல் மார்க்ஸிடம் கேட்ட வினாக்களும் அதற்கு அவர் சொன்ன விடைகளும்…
“உங்களுடைய மிக விருப்பமான சிறந்த குணம்?”
-எளிமை
“உங்களுக்கு பிரதான சிறப்பம்சம்?”
-உறுதியான நோக்கம்
“சந்தேகம் பற்றிய உங்கள் கருத்து?”
-போராடுவது
“அடிமை பற்றிய உங்கள் எண்ணம்?”
-அடங்கி நடத்தல்
“நீங்கள் மிகவும் வெறுக்கும் தீமை?”
- அடிமை புத்தி
“உங்களுக்கு விருப்பமான தொழில்?”
-புத்தகம் படித்தல்
“உங்களுக்கு விருப்பமான நிறம்?”
-சிவப்பு.
குழந்தைகள் காரல் மார்க்ஸை நேர்கண்டபோது அவர் சொல்லிய கருத்துக்கள் ஒரு புரட்சிக்காரரின் வாக்குமூலமாக அமைந்துவிட்டது.
1843 அக்டோபரில் மார்க்ஸ் பாரிசுக்குச் சென்றார். இங்குதான் மார்க்ஸின் சிந்தனைகளுக்குச் சரியான வாய்ப்புக் கிடைத்தது.
புறநகர்ப் பகுதிகளில் வாழக்கூடிய தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், ஜெர்மன் கைவினைத் தொழிலாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், தத்துவவியலாளர்கள் ஆகியோரைச் சந்திப்பதிலும், அவர்களோடு விவாதிப்பதிலும் மார்க்ஸ் நேரத்தைச் செலவிட்டார்.
1844 பிப்ரவரியில் ‘ஜெர்மன் – பிரெஞ்சு ஆண்டு மலர்’ என்ற பத்திரிகையில் ‘யூதப் பிரச்சினையைப் பற்றி’ என்ற தலைப்பில் மார்க்ஸ் ஒரு கட்டுரை எழுதினார். தேசிய இனப் பிரச்சினையைப் பற்றி மார்க்ஸின் பார்வை இந்தக கட்டுரையில் வெளியிடப்பட்டது.
இடது சாரி ஹெகல்வாதியான புரூனோ பௌவரையின் கருத்துக்களுக்கு மார்க்ஸ் இந்தக் கட்டுரையில் பதில் கொடுத்திருந்தார்.
1842-ல் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் இங்கிலாந்துக்குச் சென்றபோது மார்க்ஸைச் சந்தித்தார்
1844 ஆகஸ்டில் மீண்டும் எங்கெல்ஸ் – மார்க்ஸ் சந்திப்பு நடைபெற்றது. இருவரின் சிந்தனையும் ஒன்றுபட்டு இருந்ததால் கூட்டாகவும், தனியாகவும் சிந்தித்து பல்வேறு படைப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பிரஸ் அரசாங்கத்தின் நிர்பந்தத்தால், பிரான்சிலிருந்து மார்க்ஸ் வெளியேற்றப்பட்டார். அதனால் 1845-ல் மார்க்ஸ் பிரஸ்ஸெல்சில் குடியேறினார்.
1847-ல் ஜூலை லண்டனில் தொழிலாளர்கள் மாநாடு ஒன்று நடந்தது. தொழிலாளர்களின் சங்கத்தைத் தீவிரமான முறையில் செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்குப்பின் இந்தத் தொழிலாளர்கள் சங்கம் ‘கம்யூனிஸ்டுகள் சங்கம்’ என்று அழைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில்தான் உலகத் தொழிலாளர்களுக்காக “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற புதிய கோஷத்தை மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் வழங்கினர்.
1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.
1848-ல் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இணைந்து எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை என்ற நூல் வெளிவந்தது. உழைக்கும் வர்க்கத்தின் புரட்சித் தத்துவத்தை முதல் தடவையாகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த நூல் விளக்கியது.
1848- பிப்ரவரியில் பிரான்சில் புரட்சி வெடித்தது. அதை கண்டு அஞ்சிய பெல்ஜிய அரசாங்கம் மார்க்ஸைக் கைது செய்து நாடு கடத்தியது.
பாரிஸ், லண்டன், ஜெர்மன், பிரஸ்ஸெல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தொழிலாளரகள் அமைப்புகளை வழி நடத்துவதிலும், கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்துவதிலும் மார்க்ஸூம், ஏங்கெல்ஸும் அயராது பாடுபட்டனர்.
தொழிலாளர்களின் அமைப்பு ரீதியான செயல்களில் ஈடுபடுவது; அந்ததந்த தேசத்தின் தொழிலாளர் நிலைகளையும் ஆளுவோரின் செயல்களையும் சேகரித்து, தொகுத்து தொழிலாளர்களின் பங்களிப்பு பற்றி எழுதுவது; தொழிலாளர் போராட்டங்களை ஊக்குவிப்பது; அவற்றிற்குத் தலைமை ஏற்பது என்று பல்வேறு வடிவங்களில் மார்க்ஸூம் தொடர்ந்து செயல்பட்டனர்.
தொழிலாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற நூலாகக் கருதப்படும் ‘மூலதனம்’ என்ற நூலின் முதல் பாகத்தை மார்க்ஸ் 1867- செப்டம்பரில் வெளியிட்டார். இந்தப் பணிகளில் ஏங்கெல்ஸ் மார்க்ஸூக்கு பேருதவி புரிந்தார்.
இந்த நூலை மார்க்ஸ் எழுதி கொண்டிருந்த போது அவரது குடும்பம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது. ஒருவேளை ரொட்டித் துண்டுக்கும் கூட அந்தக் குடும்பம் அல்லல் பட வேண்டியது ஏற்பட்டது. மார்க்ஸின் குழந்தை பிரான்சிஸ்கா இறந்த போது சவப்பெட்டி வாங்கக்கூடக் காசில்லாமல் மார்க்ஸின் குடும்பம் அவதிப்பட்டது.
மார்க்ஸின் மனைவி ஜென்னிக்கு மார்பகத்தில் ஏற்பட்ட கட்டிக்கு மருந்து கூட வாங்கக் காசில்லாமல் தவித்தனர். மார்க்ஸ் குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் ஏங்கெல்ஸின் உதவிதான் அவர்களுக்கு கை கொடுத்தது;
‘மூலதனம்’ மூன்று பாகங்கள் கொண்டதாகும். இந்த நூல்கள் இன்றும் சமுதாய மாற்றத்திற்குப் போராடும் வீரர்களின் கையேடாகவும், போர் வாளாகவும் திகழ்கிறது.
உலகம் முழுவதிலுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் வகையில், 1864-ல் செப்டம்பர் 28-ல் லண்டனில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு சிறப்பாக நடக்க, வழி காட்டினார் மார்க்ஸ். இந்த மாநாட்டிலதான் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ நிறுவப்பட்டது. இதுதான் உலக அளவில் உருவான முதல் தொழிலாளர் சங்கம். இதன் தலைவராக மார்க்ஸ் செயல்பட்டார்.
1883-மார்ச் 14 -ம் தேதி காலையில் மார்க்ஸ் படுக்கையைவிட்டு எழுந்தார். படிப்பறைக்குள் நுழைந்தார்…. சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்… உட்கார்நபடியே மார்க்ஸ் மரணத்தை தழுவினார்.
மார்க்ஸின் மரணம் பற்றி, “நம் கட்சியின் மிகப்பெரும் அறிஞர் தம் சிந்தனையை நிறுத்திவிட்டார். நான்றிந்த அளவில் மிகவும் பலமான இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட்டது” என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட்டார்
http://www.tamildesam.org/special-pages/great-personalities/karl-marx/
Responses
0 Respones to "காரல் மார்க்ஸ் தத்துவமேதை"
Post a Comment