Pages

இன்று சனிப்பெயர்ச்சி! சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க!



    
             இன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்.

 
ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை ஒன்றில் வசித்தனர். அவ்வழியே வந்த துறவி ஒருவரை அவர்கள் உபசரித்தனர். இரவாகி விட்டதால், குகைக்குள் துறவியும், ஆகுகியும் தங்கினர். அதில் இருவர் தான் தங்க முடியும் என்பதால் வேடன் வெளியில் தூங்கி னான். தன் மனைவி ஒரு ஆணுடன் தங்கியிருக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. தன் மீது நம்பிக்கை வைத்த வேடனை முனிவர் பாராட்டினார். அயர்ந்து உறங்கிய வேடனை ஒரு மிருகம் கொன்று விட்டது. விஷயமறிந்த ஆகுகியும் உயிர் துறந்தாள். சுயநலமில்லாத இத்தம்பதியர் மறுபிறவியில் நள தமயந்தியாகப் பிறந்தனர். துறவி அன்னப்பறவையாக பிறந்தார். நளன் நிடதநாட்டின் மன்னராக இருந்தான். ஒருநாள் அன்னப்பறவையைக் கண்டான். நளனின் அழகைக் கண்ட பறவை, ""உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டு மன்னன் வீமனின் மகள் தமயந்தி தான். அவளை திருமணம் செய்து கொள். உனக்காக தூது சென்று வருகிறேன்,'' என்றது. அன்னத்தின் பேச்சைக் கேட்ட தமயந்தி காதல் கொண்டாள்.



 
இதனிடையே சனீஸ்வரர் உள்ளிட்ட தேவர்கள் தமயந்தியை விரும்பினர். அவளின் சுயம்வரத்தில் அனைவரும் பங்கேற்றனர். எல்லாருமே நளனைப் போல் உருமாறி வந்தனர். நிஜ நளனும் வந்திருந்தான். புத்திசாலியான தமயந்தி உண்மையான நளனுக்கே மாலையிட்டாள். அவர்களுக்கு இந்திரசேனன், இந்திரசேனை என்ற குழந்தைகள் பிறந்தனர். தமயந்தியை பெற முடியாத தேவர்கள், சனீஸ்வரரிடம், நளனைப் பிடிக்கும்படி கூறினர். கடமை உணர்வு மிக்கவர்களை சனீஸ்வரர் ஏதும் செய்யமாட்டார். அதே நேரம், கடமையில் சிறுகுற்றம் இருந்தாலும் பொறுக்க மாட்டார். நளனோ நல்லாட்சி செய்தான். இப்படிப்பட்ட ஒருவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை பூஜைக்கு தயாரான போது, சரியாகக் கால் கழுவவில்லை. ""இதைக் கூட சரியாக செய்யாத மன்னன் நாட்டை எப்படி ஆளமுடியும்?'' என கருதிய சனி, அவனைப் பிடித்து விட்டார்.






இதன் பின், புட்கரன் என்பவனிடம் சூதாடி பொன், பொருளை இழந்தான். குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினான். காட்டில் மனைவி,குழந்தைகள் படும் துன்பத்தைக் கண்ட நளன், ஒரு அந்தணர் மூலம் குழந்தைகளை தன் மாமனார் வீட்டுக்கு அனுப்பினான். பின், மனைவியையும் பிரிந்தான். நடுக்காட்டில் தவித்த அவளை, ஒரு மலைப்பாம்பு சுற்றியது. ஒரு வேடன் அவளைக் காப்பாற்றினான். ஆனால், அவள் மீது ஆசை கொண்டு விரட்டினான். தப்பித்த அவள், சேதிநாட்டை அடைந்து பணிப்பெண்ணாக இருந்தாள். ஒரு வழியாக அவளை, தமயந்தியின் தந்தை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.




தமயந்தியை பிரிந்த நளன், காட்டில் கார்கோடன் என்னும் பாம்பு கடித்து கருப்பாக மாறினான். அப்பாம்பு ஒரு அற்புத ஆடையை வழங்கிச் சென்றது. அழகு இழந்த அவன், அயோத்தி மன்னன் மன்னன் ரிதுபன்னனின் தேரோட்டியாக வேலை செய்தான். அவன் அங்கிருப்பதை அறிந்த தமயந்தி, நளனை வரவழைக்க தனக்கு மறுசுயம்வரம் நடப்பதாக அறிவித்தாள். ரிதுபன்னன் அதற்கு புறப்படவே, நளனும் வருத்தத்துடன் தேரோட்டியாக உடன் வந்தான். அப்போது, நளனைப் பிடித்த சனி நீங்கியது. தேரோட்டியாக இருந்த நளனையும், தமயந்தி அடையாளம் கண்டாள். நளன், கார்கோடன் அளித்த ஆடையை அணிந்து தன் அழகான சுயஉருவை மீண்டும் பெற்றான். திருநள்ளாறு என்னும் தலத்தை அடைந்தபோது, ஏழரைச்சனி நீங்கியது. சனீஸ்வரர் நளன் முன் தோன்றி, தன்னால் ஏற்பட்ட கஷ்டத்திற்குப் பரிகாரமாக வரம் தருவதாகக் கூறினார். ""சனீஸ்வரரே! நான் பட்ட கஷ்டம் யாருக்கும் நேரக்கூடாது. என் மனைவிபட்ட துன்பம் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. என் கதையை படிப்பவர்களை துன்புறுத்தக் கூடாது'' என வரம் கேட்டான். Œனிபகவானும் அருள் புரிந்தார். நளன் கதை படித்த நீங்கள், உங்கள் கடமையைச் சரிவரச் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறுவீர்கள்.





                                                  
Do you Like this story..?

Get Free Email Updates Daily!

Follow us!



Responses

0 Respones to "இன்று சனிப்பெயர்ச்சி! சனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க!"

Post a Comment

 

ShareThis

Return to top of page Copyright © 2012 | Dailythagaval
Blogger Widgets