புதுடெல்லி: அக்னி 2 பிரைம் நவீன ஏவுகணை நாளை ஒடிசா மாநிலத்தில் சோதனை செய்யப்படுகிறது.
அக்னி என்ற பெயரில் நவீன ஏவுகணைகளை இந்தியா தயாரித்து வருகிறது. ஏற்கனவே அக்னி 1, அக்னி 2 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இப்போது அக்னி 2 பிரைம் என்ற பெயரில் நவீன ஏவுகணையை இந்தியா தயாரித்துள்ளது. ஏற்கனவே உள்ள அக்னி 2 ஏவுகணையில் சில நவீன மாற்றங்களுடன் இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்னி 2 பிரைம் ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு 3,000 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. ஒரிசா மாநிலத்தில் உள்ள பலாசோர் ஏவுகணை தளத்தில் இருந்து அக்னி 2பிரைம் ஏவுகணை 15ம் தேதி ஏவப்படும் என்று ராணுவ அமைச்சக அதிகாரிகள் நேற்று டெல்லியில் தெரிவித்தனர்.
இதனிடையே, நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நிர்பய் எனப்படும் ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. நிர்பய் ஏவுகணை எதிரியின் இலக்கை 1000 கி.மீ. தூரம் சென்று குறிதவறாமல் தாக்கும் திறன் கொண்டவை. இந்த ஏவுகணை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சோதனை செய்யப்படும் என்று ராணுவ ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
Responses
0 Respones to "3,000 கி.மீ. சென்று தாக்கும் அக்னி : 2பிரைம் நவீன ஏவுகணை நாளை ஒடிசாவில் சோதனை!"
Post a Comment