பால்டிமோர் : இரை, தண்ணீர் இல்லாமல் பல ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் ஆஸ்திரேலிய பறவையை முன்உதாரணமாக கொண்டு சூப்பர் விமானத்தை உருவாக்கும் பணியில் அமெரிக்க நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
போர் விமானம், ராக்கெட், செயற்கை கோள் பாகங்கள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் அவற்றின் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நிறுவனம் ‘லாக்ஹீட் மார்ட்டின்’. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலம் பெதஸ்டா நகரை தலைமையிடமாக கொண்டது. அமெரிக்க அரசுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள், ராக்கெட் போன்றவற்றை அதிகளவில் சப்ளை செய்து வருகிறது.
இந்நிறுவனம் தற்போது பல ஆயிரம் கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக செல்லக்கூடிய விமானத்தை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ‘ஸ்டிரேட்டோலைனர்’ என்று விமானத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விமான தலைமை டிசைனர் வில்லியம் பிளாக் கூறிய சுவாரஸ்ய தகவல்கள்:
ஆஸ்திரேலியாவை சேர்ந்த காட்விட் பறவை (‘கண்ணாடி உள்ளான்’ என்ற வகை) இரை, நீர் இல்லாமல் பல கி.மீ. தூரம் பறக்க கூடியது. ஆஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்கு சுமார் 11,677 கி.மீ. தூரம் நான்ஸ்டாப்பாக பறந்து சாதனை படைத்தது இந்த பறவை. இதை முன்உதாரணமாக வைத்துதான் ஸ்டிரேட்டோலைனர் விமானத்தை டிசைன் செய்தேன். அதாவது, இன்ஜின் சூடு தணிக்க, எரிபொருள் நிரப்ப என்று எந்த காரணத்துக்காகவும் தரையிறங்க கூடாது. நான்ஸ்டாப்பாக வெகு நேரம் பறக்க வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தின் கீழ் பகுதியைவிட மேல் பகுதியில் காற்று இடைஞ்சல் குறைவாக இருக்கும். ஆனால், அவ்வளவு உயரத்தில் விமானங்கள் பறக்க முடியாது. எனவே, அதிக உயரத்தில் பறப்பதற்கு ஏற்ப காட்விட் பறவை போலவே பெரிய இறக்கைகள், பின்பக்க வால் பகுதி டிசைன் செய்யப்பட்டுள்ளது.
விமானத்தை அதிக உயரத்துக்கு கொண்டு செல்வதற்காக 4 கிரையோஜெனிக் ஹைட்ரஜன் டர்போஃபேன் இன்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. போர் விமானங்கள் போல இது குறைந்த எரிபொருளில்கூட இயங்க முடியும். சிறிதுகூட புகையை வெளியேற்றாது என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் தவிர்க்கப்படும். விமான வடிவமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு வில்லியம் பிளாக் கூறினார்.
Responses
0 Respones to "பறவை டிசைனில் பிரமாண்ட விமானம் !"
Post a Comment